புதிய இயக்கத்தின் பெயரை இன்று அறிவிக்கும் அண்ணாமலை; சமூக ஊடகங்கள் மூலம் மக்களுடன் கலந்துரையாடல்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தாம் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை இன்று (ஜூன் 6) அறிவிக்க உள்ளார். இதனையடுத்து, சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு, பாசம் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு, தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று நண்பகல் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, மனம் திறந்து உரையாட ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாஜகவிலிருந்து விலக முடிவு செய்துள்ள அண்ணாமலை, அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தனது முடிவை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை, அடுத்த 18 மாதங்களுக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் வகுத்துள்ளார். அதன் பின்னர் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




